2022 - வருடம் இப்படி இருந்தது ?

Posted on January 2, 2023 by சே சிவக்குமார்
...


ஜனவரி மற்றும் பிப்ரவரி ஊரில் இருந்தேன். மங்களூர் மற்றும் சிருங்கேரி பயணம் , சிதம்பரம் பாண்டிச்சேரி வழியாக மழைப்பயணம் , மூணாறு பயணம் , கோவை ஈஷா , சேலம் நண்பனை பார்க்க பயணம் , சென்னை எஸ் ரா படைப்புக்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு, ஊர் வட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலை பயணம் , குக்கூ காட்டுப்பள்ளி திருவாண்ணாமலை என்று இந்த ஆண்டு நிறைவான பயணங்களில் துவங்கியது.பிப்ரவரி இறுதியில் சவூதி வந்துவிட்டேன். அதை தொடர்ந்து புத்தக வாசிப்பு மற்றும் இலக்கிய ஒலியில் தமிழில் வெளியாகும் சிறந்த கதைகள் மற்றும் புத்தகங்களை பற்றிய பதிவுகளை வெளியிடும் பணி தொடர்ந்தன. மொத்தம் 31 பதிவுகள் 14 மணிநேர ஒலி பதிவுகள். ஏப்ரல் மாதம் இலக்கிய ஒலிக்காக ஒரு வலைத்தளத்தையும் உருவாக்கினேன். அது என் நீண்டநாள் கனவுகளில் ஒன்று . இலக்கிய ஒலி எனக்கு உலகம் முழுக்க பல நண்பர்களையும் அவர்களின் அன்பையும் கொண்டுவந்து நிறைத்துக்கொண்டே இருக்கிறது. ஒருவிதத்தில் இந்த செயல்பாடு என் கர்மயோகமாகவே இருக்கிறது.என் யோக ஆசிரியர் சௌந்தர் ஆகஸ்ட் மாதத்தில் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பை துவங்கினார். அதில் இணைந்தது என் பேறு. நவீன இலக்கியம் அறிந்தவர். அவரிடம் யோகத்தை மரபார்ந்த முறையில் கற்கிறேன். இலக்கியம் , இந்திய யோக மரபு , இந்திய அறிவு மரபு , நவீன அறிவியல் , தத்துவம் என்று பல்வேறு தளங்களில் அவருடனான உரையாடல் என் அகம் உயர்ந்த ஒன்றை நோக்கி நகர்வதற்கான பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.என்னுடைய நீண்ட நாள் முயற்சி உடல் எடையை குறைப்பது. கூறிய மொழியில் சொல்வதென்றால் உண்பதற்க்கான முனைப்பை குறைப்பது. மனம் நிறைவின்மையை , நிலையின்மையை , தத்தளிப்பை உணரும்போது இயல்பாக அது உணவை தேடுவதை எதோ ஒரு கணத்தில் உணர்ந்தேன்.அது போன்ற தருணங்களில் மனதை வேறுபக்கம் திசை திருப்புவதை பழக்கமாக்கிக்கொண்டு தினமும் காலை இடைநில்லாது மூன்றுமாதம் மெல்லோட்டமும் மாலை யோகாவும் செய்தேன். கடந்த பத்துவருடங்களாக தொடர்ந்த என் மிகுஉடல்எடையிலிருந்து பத்து கிலோ வரை குறைத்தேன். திரும்ப திரும்ப உண்ணத்தூண்டும் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகள் , ஈர்க்கும் வண்ண நிறமிகள் சேர்த்த உணவுகள் , கவரும் கார்ப்ரேட் உணவுகள் , சிற்றுணவுகள் அனைத்தையும் தவிர்க்கிறேன். தரமான இயல்பான சுவையோடு இருக்கும் உணவை அளவோடு எடுத்துக்கொள்கிறேன்.இறுதியாக இந்த மாதம் டிசம்பரில் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டது மகிழ்வான தருணமாக அமைந்தது. நவீன இலக்கியம் சார்ந்து நடக்கும் மிகப்பெரும் விழா. தமிழின் முக்கியமான எழுத்தாளருக்கு விருது வழங்குதல் என்பது விழாவின் மையநோக்கு என்றாலும் அதை சார்ந்து அங்கு தமிழின் முக்கிய எழுத்தாளர்களை சந்தித்தல், நண்பர்களை சந்தித்தல் , புதிய நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுதல் , அவர்களோடு இலக்கியம் சார்ந்து தொடர்ந்து உரையாடுதல் என்று பெரிய அறிவு கொண்டாட்டமே நிகழ்கிறது. நாம் எதில் நிறைவடைகிறோமோ அதில் நிறைவடைகின்ற சக உயிரினங்களோடு இரண்டு நாள் ஒன்றி உறவாடினால் அடுத்து பல நாட்களுக்கு உயிர் வாழ தேவையான ஆற்றலை பெற்றுவிடுகின்றோம்.இவையெல்லாம் ஒருபக்கம் என்றால் இன்னோரு பக்கம் அன்றாட வாழ்க்கையிலும் வேலைக்கு செல்லுதல் , அகங்கார ஆணவ மோதல்கள் , பொருளீட்டல் , சொத்து உரிமையாடல் என்று நாட்கள் சென்றன. அன்றாட கடமையில் பொருளீட்டி அகநிறைவுக்கு செலவு செய் என்பது என் என் ஆசிரியர் சொல் (ஜெ ).ஆம் இந்த ஆண்டும் அகநிறைவோடு கழிந்தது .அவ்வாறே ஆகுக ஓம் ஓம் !!!.