ஜெ என் ஆசிரியர் ( ஜெ 60 )
நண்பர்களுக்கு வணக்கம் ,
ஜெவின் 60 ஆவது பிறந்த நாளை நண்பர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெவை படிக்க துவங்கியதிலிருந்து என் அகத்திலும் புறத்திலும் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று நேற்றிலிருந்து நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
நான் பிறந்தது கிராமத்தில், எங்கள் வீட்டில் டேப் ரெக்கார்டர் தொலைக்காட்சி வண்டி வாகனம் என்று நகரத்து எல்லா வசதிகளும் இருந்தன அதுவும் தொண்ணுறுகளின் தொடக்கத்தில் . கிராமத்து பள்ளியில் நான் எட்டாவது வரை படித்தேன். எங்கள் வகுப்பில் நன்றாக படிப்பவன் நான். அதனினும் நன்றாக சண்டை போடுபவன். அதனாலேயே முதன்மையானவன். அந்த பள்ளியில் அதுவும் முக்கியமாக நான் இருந்த வகுப்பில் என்னை அனைவருக்கும் தெரியும் அதே போல எனக்கும் அனைவரையும் தெரியும். ஊரில் எங்கள் குடும்பத்தின் மீதும் பள்ளியில் என் மீதும் அனைவருக்கும் மரியாதை இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு நகரத்துக்கு படிக்க சென்றேன். வகுப்பில் எனக்கு யாரையும் தெரியவில்லை அதைவிட என்னை யாருக்கும் தெரியவில்லை.. அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கிராமத்திலிருந்து வந்ததால் நான் பேசும் விதத்தை கிண்டல் செய்ய துவங்கினர் . காட்டான் என்று பெயர் வைத்தனர். என்னைவிட நன்றாக படிப்பவர்கள் இருந்தார்கள். மனப்பாடம் செய்து அதை அழகாக எழுதி மதிப்பெண் வாங்க கற்றிருந்தார்கள். சண்டைகளில் என்னை இடக்கையால் கீழே தள்ளிவிடுபவர்கள் இருந்தார்கள். ஆங்கில ஆசிரியர் பெஞ்சிமின் முழங்கால் வீங்க அடித்தார்.
நகர பொருட்கள் முன்னமே எங்கள் வீடுவந்து நிறைந்துவிட்டது . ஆனால் நகர மொழி அதன் உள்ளடுக்குகள் நாகரிகம் அவர்கள் வாழ்க்கை முறை எதையும் என்னால் உள்வாங்க முடியவில்லை . ஒரு நண்பனின் வீட்டில் சமையலறைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வரும்போது நான் சமையலறைக்குள் போகக்கூடாது என்கிறார்கள் . இன்னொரு நண்பன் வீட்டில் தனியறையில் இருந்த கழிவறையை நான் பயன்படுத்தக்கூடாது என்றார்கள் . இன்னொரு வீட்டில் சோபாவில் நான் படுக்கக்கூடாது என்றார்கள். அந்த நாட்களில் நான் கொஞ்ச கொஞ்சமாக தனிமையை உணரத்துவங்கினேன் . பெரும் தாழ்வுணர்வு மனதில் நிறைந்தது. அந்த இருவுணர்வுகளும் கல்லூரி முடித்து வேலைக்கு சென்றபிறகும் நீடித்தது.
நான் படித்த பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்கள் வந்து படித்தனர். கல்லுரியின் ஆங்கிலச் சூழல் அதன் மிகைபகட்டான ஆடம்பர சூழல் என்னை நிலையழிய செய்தது. அதைவிட வகுப்பின் அறிவு சூழல் என்னை பயங்கொள்ள செய்தது. எப்போதும் ஒரு கூச்சம் பயம் நிறைவின்மை பின்வாங்குதல் ஒளிந்துகொள்ளுதல் என்றே கல்லூரி நாட்களை கழித்தேன் . யார் பாதங்களிலும் மிதிப்பட்டுவிடாமல் ஊர்ந்துகொண்டு இருந்தேன். பெரும்பாலும் தற்கொலை எண்ணத்தோடு தான் சுற்றிக்கொண்டு இருந்தேன். இந்த நிலையிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னை காத்தன . ஒன்று நண்பர்கள் இரண்டு விவேகானந்தர் புத்தகங்கள்.
நண்பர்கள் என் அறிவு போதாமையை பொறுத்துக்கொண்டனர் . என் சூழலுக்கு ஒவ்வாத நடத்தைகளையும் பேச்சுக்களையும் சகித்துக்கொண்டனர். எல்லை மீறும்போது கண்டித்தனர். கடைசிவரை கைவிடாமல் அரவணைத்தனர்.
வாழ்வில் நம்பிக்கை வேண்டி விவேகானந்தரை நாடினேன். தவறாமல் ராமகிருஷ்ணவிஜயம் வாங்கி படிக்கத்துவங்கினேன். கிடைக்கின்ற காசுக்கு விவேகானந்தர் புத்தகங்களை வாங்கினேன். மரபு பற்றி ஒரு அடிப்படையான பயிற்சி இல்லாததால் அதில் உள்ள தத்துவங்கள் கோட்பாடுகள் எதுவும் என்னால் உள்வாங்கமுடியவில்லை. ஆனால் அவைகள் மீது எனக்கு ஈடுபாடு இருப்பதை உணரமுடிந்தது. தொடர்ந்து படித்தேன் . மடங்களுக்கு சென்றுவந்தேன். சாமியார்களின் உரைகளை கேட்டேன். ஆனால் படிப்பவைகளை கேட்பவைகளை தொகுத்து அவைகளை என் அறிவாக மாற்றிக்கொள்ள முடியவில்லை . அதற்கு ஒரு குரு தேவை என்பது கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒரு பக்கம் என் இருத்தலியல் சார்ந்து எனக்கு ஒரு அடையாளம் தேவையாக இருந்தது. என் ஆர்வம் சார்ந்து அது நம் மரபு பண்பாடு ஆன்மிகம் மீதான ஈடுபாடாக இருந்தது. இன்னொரு புறம் எனக்கு சில இயல்பான குணங்கள் இருந்ததை உணர்தேன் . அது கலைகள் மீதான ஆர்வம். மரபாக என் முன்னோர்கள் கூத்துக்கலையில் இருந்திருக்கிறார்கள். இயல்பாகவே எனக்கு பாட ஆட வந்தது.
எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவுக்கு முந்தைய மாதங்களில் எங்கள் அனைவருக்கும் கைசிலம்பு நடனம் ஆட பயிற்சி கொடுப்பார்கள். கைசிலம்பு நடனம் வடதமிழக நாட்டார் கலை. பம்பை மேளத்தின் பனிரெண்டு தாளக்கட்டுக்கு ஏற்றவாறு ஆடும் நடனம். சிறுவயதிலேயே தாளமும் நடன லயமும் என் உடலில் கூடிவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது. ராமாயணம் திருவிழா கூத்திலும் மஹாபாரதம் கதா காலச்சேபங்களிலும் எனக்கு அறிமுகமானது. எங்களுக்கு திருவிழா என்பது ஊர் சுற்றி சேற்றில் புரண்டு ஆடிக்களித்து கதைகளில் திளைத்து மகிழ்வது தான்.
பள்ளி தேர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்துவிடும் . மே மாதம் துவங்கும் வரை பள்ளி நடக்கும் . எங்கள் தமிழ் வாத்தியார் அந்த ஒரு மாதமும் பல கதைகளை எங்களுக்கு சொல்லி இருக்கிறார் . பக்கத்து வீடுகளிலும் கதை சொல்பவர்கள் இருந்தார்கள் . ஜெய பெரியம்மா தென்னை ஓலை பின்னிக்கொண்டே , கிழிந்த துணிகளை தைத்துக்கொண்டே , ரேந்தர் கல்லை சுழற்றிக்கொண்டே கதைகளை சொல்லுவார் . தாய்மாமா பழைய அம்புலிமாமா கதைகளை தொடர்ந்து படித்து எங்களுக்கு கதைகளை சொல்லியிருக்கிறார். என் அண்ணி ராணி வார இதழ் மற்றும் ராணிமுத்து படிப்பவர். அதன்வழியே ராணிக்காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது. தொடர்ந்து சிறுவர்மலர் கோகுலம் படிக்கத்துவங்கினேன்.எல்லமே கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை . பின்பு கல்லூரி இரண்டாம் ஆண்டுவரை நான் எதையுமே படிக்கவில்லை . கல்லூரி இரண்டாம் ஆண்டு முதல் மெதுவாக தன்னம்பிக்கை புத்தகங்கள் படிக்க துவங்கி விவேகானந்தர் புத்தகங்களுக்குள் நுழைந்தேன் .
கல்லூரி முடிந்து கரூரில் ஒரு மில்லில் விடுதியில் தங்கி வேலை பழகிக்கொண்டு இருந்தேன். கமலஹாசன் மருதநாயகம் படம் எடுக்கப்போவதாக அறிவித்தார் . அதை பற்றி அறை நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் ஒரு புத்தகத்தை கொடுத்தார்.
அது மருதாநயம் பற்றிய புத்தகம் , கூடவே ஸ்ரீரங்கநாதர் கோவில் சுல்தான்களின் படையெடுப்பால் தாக்கப்பட்ட போது அவர்களிடமிருந்து ஸ்ரீரங்கநாதரை ஒரு குழு எப்படி காப்பாற்றி கொண்டு சென்று திருப்பதியில் வைத்து பாதுகாத்து மீண்டும் நாயக்கர் ஆட்சி மலர்ந்த போது கோலாகல திருவிழாவோடு மறுபடியும் ஸ்ரீரங்கநாதரை கோயிலுக்கு அழைத்துவந்தர்கள் என்பதைப்பற்றியான நாவல்.
அதை மூன்று நாளில் படித்துமுடித்தேன். அதன் பின் ஒரு தன்முனைப்பு தூண்டப்பட்டு தொடர்ந்து வரலாற்று நாவல்களை படிக்கத்துவங்கினேன். பொண்ணின் செல்வன் , சிவகாமியின் சபதம் என அது தொடர்ந்தது விகடனில் தேசாந்திரி வழியாக எஸ் ரா அறிமுகமானார் அவர் வலைத்தளமும் அறிமுகமானது.
எஸ் ரா எழுத்துக்கள் என் உணர்வுகளின் ஒழுங்கற்ற சுழற்சியை முறைப்படுத்தியது. வாசிப்பு என் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றியது . இலக்கியம் அறிமுகமானது
ஒரு பக்கம் விவேகானந்தர் புத்தகங்கள் ஆன்மிக உரைகள் சுய யோக பயிற்சிகள் என்னை ஒடுங்க சொன்னது ஒரு புள்ளியில் குவியச்சொன்னது.
மறுபுறம் இலக்கியம் கட்டற்று பறக்க சொன்னது. வட்டத்துக்கு வெளி நோக்கி கால்கள் நீண்டது. இந்த இருவழி தேடல்களை ஒன்றென இணைக்கும் புள்ளி ஏதாவது இருக்கிறதா , அப்படியான சாத்தியங்களை முன்வைக்கும் ஆளுமை யாராவது இருக்கிறார்களா ?
2012ல் ஒரு நாள் பத்ரி அவர்கள் ஒருங்கிணைக்கும் பாரம்பரிய அறக்கட்டளை மாதாந்திர நிகழ்வில் குறுந்தொகை பற்றி ஒருவர் உரையாற்றினார். அப்போது நான் பாலைக்கு வேலைக்கு வந்துவிட்டேன் . காரில் சென்றுகொண்டு இருக்கும்போது அதை கேட்டேன் . குறுந்தொகை பாடல் ஒன்றில் பூக்கள் உதிரும் ஓசையை கேட்டுக்கொண்டு இரவெல்லாம் ஒருவன் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தான். பூக்கள் உதிரும் ஓசையை கேட்கமுடியுமா அது நிஜமாகவே பூ உதிரும் ஓசைதானா அல்லது அவள் மீதான நம்பிக்கை கொஞ்ச கொஞ்சமாக உதிரும் ஓசையா அல்லது காலம் துளித்துளியாக உதிரும் ஓசையா என்ன அது .... நான் காரை நிறுத்திவிட்டேன்.
இறங்கி பாலையை பார்த்தேன். ஒருகாலத்தில் இந்த பரந்த பாலை பெரும் அடர்வனமாக இருந்தது . காலன் கை சொடுக்கியபோது காடு மண்ணின் ஆழம் நோக்கி பயணம் செய்து மக்கி கரும்கூழ் ஆனது. மண் காட்டின் நினைவுகள் போல விதைகளை தேக்கி வைத்து வான்நோக்கி வாய்திறந்து காத்திருக்கிறது. காலனின் அடுத்த கை சொடுக்களுக்காக.
அலுவலகம் வந்து பத்ரி தளத்துக்கு சென்று அந்த காணொளியை மறுபடியும் பார்த்தேன்.
ஜெயமோகன் .
மேடையில் நாடக தன்மையற்ற தாளம்மில்லாத தமிழில் ஆமாங்க அது அப்படித்தான் என்று பேசிக்கொண்டு இருந்தது ஜெயமோகன் தான். அதே தளத்திலில் இடது பக்கத்தில் சில வலைத்தள முகவரிகள் இருந்தது. ஜெயமோகன். இன் ஐ சொடுக்கினேன்.
அந்த கொடுக்கல் எனக்கு காலத்தின் சொடுக்கு போல ....., இன்றும் என் காலை துவங்குவது அந்த சொடுக்களில் தான்.
அன்று தளத்திற்குள் சென்று நான் படித்த முதல் கட்டுரை சாதி சார்ந்த கட்டுரை . அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அந்த தளத்திற்கு சென்று படிக்கத்துவங்கினேன்.
ஒரு அறையில் புத்தகங்களை வாங்கி குவித்தால் கொஞ்சநாட்களில் அந்த அறை குப்பை குவியலக மாறிவிடும் என் மனமும் அப்படித்தான் இருந்தது.
ஜெ தளம் அந்த குவியலை மெதுமெதுவாக வகை படுத்தியது தரம் பிரித்தது தேவையற்றதை வெளியே தள்ளியது. தேவையானதை சீராக அடுக்கத்துவங்கியது.
இந்து மெய்ஞன அடிப்படைகளை முதலில் படிக்கத்துவங்கினேன். தொல் தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் முதன்மை தெய்வங்கள் பக்திமரபு தத்துவ மரபு தரிசங்கள் அதை சார்ந்த கலை இலக்கியங்கள் புராண மரபு அதை சார்ந்த யோகிகள் ரிஷிகள் குரு மரபுகள் கோவில்கள் அதிலுள்ள சிலைகள் ஓவியங்கள் கட்டுமான அமைப்புகள் அதை சார்ந்த முதன்மையான ஆளுமைகள் என்று அது நீட்டுக்கொண்டே சென்றது.
அதன் தொடர்ச்சியாக வரலாறு பற்றிய அடிப்படைகளை படிக்கத்துவங்கியபோது இதுநாள் வரை நான் உழன்று கொண்டிருந்த வெற்று பெருமிதக்களிலிருந்து நான் வெளில் வந்தேன். தொல்பொருள் ஆராச்சி அது தரும் புறவயமான தரவுகள் அவை இட்டு நிரப்பமுடியாத இடைவெளிகளை வரலாற்று புனைவுகள் எப்படி நிரப்புகின்றன , வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் கோட்ப்பாடுகளுக்கு அந்த பெருக்கில் இடம் என்ன என்று தொடர்கின்றது அந்த கட்டுரைகள்
முக்கியமாக நம் பண்பாடு கலாச்சாரம் பற்றிய கட்டுரைகள்.
இரு கை நிறைய கடுகை அள்ளி தரையில் விட்டால் அவை சிதறி உருண்டு தனித்தனியாக நிற்கும் . இந்த மாபெரும் நிலப்பரப்பில் பல்வேறு மக்கள் பல்வேறு மொழி பண்பாடு கலாச்சாரம். வரலாற்றில் எதோ ஒரு தருணத்தில் இவை பிரிந்து உருண்டு தனித்தனியாக சென்று நிற்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தது. உலகத்தில் பல நாடுகள் அப்படி முற்றழிந்திருக்கின்றன அல்லது அழித்துக்கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அத்தனை பண்பாட்டையும் இணைக்கும் மையச்சரடுகள் இருக்கின்றன என்று ஜெவின் கட்டுரைகள் எனக்கு காட்டின. எனக்கு இந்தியா என்ற நிலப்பரப்பின் மேல் நாடு என்ற அமைப்பின் மேல் மெரும்மதிப்பு கூட்டியது.
ஒரு அரசியல் கோட்ப்பாடு எவ்வாறு உருவாகி வருகின்றது அதன் அடிப்படை என்ன பொருளதாரமா மதமா சமூக மாற்றத்தின் தேவையா அதன் செல்வழி வன்முறையா, சாத்விகமா, கோட்ப்பாடு எப்படி ஒரு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுகிறது அந்த கோட்ப்பாடுகள் உருவாகி நிலைபெற்றுவிட்டதனாலையே தன்னை தக்கவைக்க அது ஏற்படுத்தும் அழிவுகள் என்று நீள்கிறது அரசியல் கட்டுரைகள்
அனைத்திற்கும் முதன்மையாக இலக்கியம் புனைவு என்பதற்கான அடிப்படைகளை நான் ஜெவின் எழுத்துவழியே தான் தெரிந்துகொண்டேன். அதற்க்கு முன்பு கையில் கிடைத்த அனைத்து புத்தகங்களையும் படித்துக்கொண்டு இருந்தேன்.
ஜெவின் எழுத்துவழியே மரபு இலக்கியம் என்றால் என்ன நவீன இலக்கியம் என்றால் என்ன அது வணிக இலக்கியம் எது பின்னவீனத்துவம் நவீன இலக்கியத்தில் நம் மரபு எவ்வளவு முக்கியம் என்று அறிந்துகொண்டேன். அரசியல் கோட்ப்பாடு சார்ந்த புனைவுகளை இனம்கண்டுகொண்டது எனக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது. அந்த வகையில் நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்ற புத்தகம் இலக்கியம் சார்ந்த என் புரிதலை ஒருங்கிணைத்தது. எது இலக்கியம், யார் இலக்கியவாதி என்று அடையாளம் காட்டியது.
ஜெவின் பயணக்கட்டுரைகள் என்னை வெவ்வேறு நாடுகள் அவற்றின் நிலங்கள் மக்களை பற்றிய புரிதலை உருவாக்கியது.
வெண்முரசு ஒரு எழுத்து யோகியால் மட்டுமே எழுதகூடியது. தொடர்து ஜெ வை வாசித்ததால் அந்த எழுத்து நடையை இயல்பாகவே என்னால் பின்தொடர முடிந்தது. அந்த மாபெரும் கதை கட்டுமானத்தில் என்னை பொருத்திக்கொள்ள முடிந்தது. புனைவின் உச்ச சாத்தியம் வெண்முரசு. அது பல மாற்றங்ககள் எனக்குள் நிகழ்த்தியது. முக்கியமாக வாழ்வின் சமநிலை . என்னால் இனி எந்த மனிதர்களையும் வெறுக்கமுடியாது என்றே நினைக்கிறேன்.
ஜெ படிக்க துவங்கிய இத்தனை ஆண்டுகளை நினைவுகூரும்போது ஒன்றை அறியமுடிகிறது நான் ஆன்மிகத்தை விடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புனைவுலகு சார்ந்து கலை ரசனை சார்ந்து நகர்ந்து வந்திருக்கிறேன். என் வழி இது என கண்டுகொண்டு இருக்கிறேன். புத்தக குவியலாக இருந்த அறை இன்று சீராக அடிக்கி வைக்கப்பட்ட நூலகம் போல இருக்கிறது.
ஜெ எனக்கு எழுத்தாளர் மட்டுமல்ல அரசியல் , வரலாறு , பண்பாடு ,கலை , இலக்கியம் , ரசனை வாழ்வு அனைத்தையும் பயிற்றுவித்த ஆசிரியர்.
நன்றி