13 ஆண்டு காலம் சீசா விளையாட்டு

Posted on April 30, 2022 by சே சிவக்குமார்
...

 நண்பர்களுக்கு வணக்கம் 


போன வாரம் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு விவாதம் நடந்தது. 


கவிதா : நீ ஏன் படிப்பதை ஒலி வடிவில் பதிவு செய்து வெளியிடுற ? உனக்கு கிடைக்கிற நேரம் எல்லாம் அதுக்கே ஏன் செலவு பண்ற ? உனக்கு அதுல என்ன கிடைக்கிறது. இப்ப செலவு பண்ணி ilakiyaoli .com ன்னு வெப் சைட் வேற ஆரமிச்சிருக்க ?


நான் : எனக்கு தெரியல , என் குரல் எல்லோரும் நல்லா இருக்கிறதா சொல்றாங்க , எனக்கு இலக்கியம் தெரியும் என் குரலை பதிவு பண்ணா நல்லா இருக்குன்னு எனக்கும் தோணுது. அது எனக்கு அமைந்த திறமையின்னு நினைக்கிறேன். ஒருத்தன் தன் திறமை இதுன்னு உணர்ந்துடா அவனால அத வெளிப்படுத்தாம சும்மா இருக்க முடியுமா ? அதற்க்கான வாய்ப்பு அவனுக்கு  அமையலன்னா அவன் நிலையழிவான்னு நினைக்கிறன் அல்லது அத பத்தியே நினைச்சிட்டு இருப்பான். நா படிக்கிற இலக்கியத்த குரல் வழியப்பதிவு பண்ணணுன்னு தோணுது . செய்யும்போது சந்தோஷமா இருக்கு அவ்வளவுதான். 


என் பதில் அவளுக்கு நிறைவை அளிக்கவில்லை. ஒரு செயல்  இரண்டுவிதத்தில்  பயனளிக்க வேண்டும். ஒன்று அகவயமாக , இரண்டு புறவயமாக. அவள் கேட்பது புறவயமாக  உனக்கு என்ன கிடைக்கிறது என்பதை . 


என்னுடைய பதில் , அப்படி எதுவும் புறவயமாக கிடைப்பதில்லை என்பது தான். ஆனால் அகவயமான மகிழ்ச்சி அளிக்கிறது . அதை வேறுவிதத்தில் அவளுக்கு புரியவைக்கலாம் என்று  நினைத்தேன். 


இங்கு சவூதியில் நாங்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் ஒரு பார்ட்டி ஹால் இருக்கிறது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் குடும்பங்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். ஒரு பக்கம்  குழந்தைகள் தமிழ் கவிதைகள் , தமிழ்  பேச்சு  , பரதநாட்டியம் , பாடல் என்று அசத்தினார்கள். பெரியவர்களும் பாட்டு நடனம் பட்டிமன்றம் என்று நிகழ்த்தினார்கள். இரவு உணவு ஏற்பாடாகி இருந்தது. இது ஒரு கூட்டு உழைப்பு . அத்தனை பேரும் பங்கெடுத்தார்கள் . ஆனால் அத்தனை நிகழ்வும் ஒருங்கிணைத்து நடத்தியது கவிதா தான். நிகழ்ச்சி அவ்வளவு நிறைவாக இருந்தது. இந்த நிகழ்வு மட்டுமல்ல வருடத்தில் நிகழும் பொங்கல் தீபாவளி புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து முன்னடத்துவது அவள் தான். அது அவள் திறன்.


ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு வேலைசெய்கிறாயே உனக்கு என்ன கிடைக்கிறது என்று கேட்டேன்.


அதில் எல்லோரும் தான் வேலை செய்கிறார்கள். நான் எனக்கான  வேலையை செய்தேன் அவ்வளவு தான் என்றாள். அதன் பின் இந்த விவாதத்தை எப்படி முன்னகர்த்துவது என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் கவிதாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். 


அவள் முற்றிலும் அறிவு சார்ந்து தர்க்கம் சார்ந்து சிந்திப்பவள். 


வாழ்க்கை பற்றிய மனிதர்களை பற்றிய  அவள் மதிப்பீடுகளும்  அதை சார்ந்து தான் இருக்கும். அதனாலேயே அவள் செய்யும் செயல்களில் எந்த தடுமாற்றமும் இருக்காது. அன்றாடத்தில் அவள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும்  சரியாகவே இருக்கும். 


அவளும் தீவிர இலக்கியம் படிப்பவள் . நான் வாங்கும் புத்தகங்களை முதலில் படிப்பது அவள் தான். புத்தகத்தில் ஆசிரியர் சொல்லுவதை அனைத்தையும் அவள் எடுத்துக்கொள்ளுவதில்லை. அவள் கையில் என்ன அகப்படுகிறதோ அவளுக்கு என்ன தேவையோ அதைமட்டுமே எடுத்துக்கொள்ளுவாள். 


நான் உணர்வுகள் சார்ந்து சிந்திப்பவன். லாவுதீக வாழ்வில் பின்தங்கியவன். நிகழ்வுகள் பெயர்கள் பணம் எதுவும் நினைவில் நிற்காது. அவள் எடுக்கும் சில  முடிவுகளை நான் என் உள்ளுணர்வால்தான் வேண்டாம் என்பேன். ஏன் வேண்டாம் என என்னால் விளக்க முடியாது. என் வற்புறுத்தலால் மட்டுமே அதை ஏற்பாள். அதன் விளைவு எதுவென்றாலும் பொறுப்பு அவளே ஏற்றுக்கொள்வாள். 


பெரும்பாலும் நாங்கள் விவாதிப்பது மற்றவர்களுக்கு சண்டை இடுவதாகவே தோன்றும். சில நேரங்களில்  சொல் சரியாக கூடி வராமல் தடுமாறி மிகை சொற்களால் விவாதம் வழி மாறி நாங்கள் புண்படுவதும் உண்டு. ஆனால் உடனே நிலை மீண்டு கைகோர்த்துக்கொள்வோம். 


அவள் தன்னியல்பானவள் , சுயமானவள். சிலநேரம் என் வெற்று ஆண் ஆணவம் வெளிப்படும்போது தன் சிறிய நுட்பமான அசைவால் அதை தட்டிவிட்டு செல்வாள். 


 வெவ்வேறு தளத்தில் நாங்கள் இருவரும் சமமாக இருக்கிறோம். ஆனால் இருவரும் அமர்ந்திருப்பது குழந்தைகள் விளையாடும் சீசாவின் மேல். நான் மேலே சென்றால் அவள் கீழே செல்வாள். நான் கீழே சென்றால் அவள் மேலே செல்வாள். வாழ்க்கை எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுபோல இருக்கிறது. 


அதையெல்லாம் தாண்டி அனைவர் மீதும் அவளுக்கு பெரும் கருணை இருக்கிறது . அது பெண்களின் இயல்பான உணர்வு என்று நான் நினைப்பது உண்டு.  அவள் அன்னை அதை அவளுக்கு  கைமாற்றி இருக்கலாம்.


மற்றவர்களுக்கு அந்த கருணை பசியாற்றுவதாக வெளிப்படுகிறது.


தருணம் வாய்க்கும்போதெல்லாம் சுற்றி இருப்பவர்களுக்கு ருசியான உணவை அளித்துக்கொண்டே இருக்கிறாள். 


எனக்கு அந்த கருணை அவளிடமிருந்து  சொல்லாக வெளிப்படுகிறது.  இச்சையால் நான் வழி விலகும்போது அவள் "சொல்" மாயக்கரம்  என என்னை  இழுத்து வழியில் இருத்துகிறது. அப்படியும் அந்த கையை உதறி நான்  வழிவிலகி விழும்போது என்னை எழுப்பி மண்ணை துடைத்துவிட்டு முன்னகர்த்துகிறது. உணர்ச்சிகள் மேலோங்கி உன்மடியில் படுத்து கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ளட்டுமா என்று கேட்டால் , தம்பி உணர்ச்சியெல்லாம் வரும் போகும் நீ உன் அடுத்த வேலையை பாரு என்று சொல்வதும் அதே கருணை தான். 


எங்களுக்கு இடையில் இருக்கும் காதல் அன்பு காமம் ஊடல் அனைத்துக்கும் மேலாக இந்த கருணையே 13 ஆண்டு காலம் எங்களை இணை என ஒன்றாக நிறுத்திவைத்திருக்கிறது. இனியும் நிறுத்தும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. 


இன்று எங்களுக்கு திருமண நாள் . கடவுளுக்கு நான் எதற்காகவாவது  நன்றி சொல்லவேண்டும் என்றால் அவளிடமிருந்து எழும் எந்த கருணைக்காக மட்டுமே.