வாழ்க்கை இனியது 

Posted on September 26, 2022 by சே சிவக்குமார்
...

காலையில் மெல்ல படுக்கையிலிருந்து புரண்டெழும்  குழந்தை போல  வெளிப்படுகிறது சூரியன் . மெல்ல மெல்ல  அதில் தழல் நிறைகிறது. ஆம் என ஒளி பரவுகிறது. ஓம் என எழுகிறது சூரியன். காத்திருந்த உயிர்களெல்லாம் ஒளி உண்டு நிறைக்கின்றன.  நான் நான் என துள்ளி வேட்டைக்கு போகும் மாடன் போல அன்றய முதலடியை எடுத்து வைக்கிறது சூரியன். அன்றாடம் நம் கண்ணுக்கு எட்டும்  இயற்கையின் பெருநிகழ்வு. கருணையின் வெளிப்பாடு. 


நான் இருக்கும் நகரம் கோபார் சவூதி அரேபியா. கடல் விளிம்பு நகரம். கடற்கரையில் பல மைல் நீளத்திற்கு  அழகான பூங்கா அமைத்திருக்கிறார்கள். இன்று  காலை ஐந்து மணிக்கு ஒரு மெல்லோட்டம் போகலாம் என அங்கு சென்றேன். 


 பூங்கா துவங்கும் இடத்தில் ஒரு நவீன சைக்கிள் வாடகை விடும் கடை இருந்தது .  அதன் அருகில் காரை நிறுத்தினேன் . அங்கு  சீருடை அணிந்த ஒருவன் சிரத்தையாக கடையின் முற்றத்தை  சுத்தம் செய்துகொண்டு இருந்தான். தண்ணீர் தெளித்து கோலம் போடுவானா , தெரியவில்லை. ஊரில் சொண்டி சைக்கிள் கடைமுன்பு அவள் மனைவி தண்ணீர் தெளிப்பாள் , சின்ன சைக்கிள் வாடகை எடுக்க கடை  திண்ணையில்  காத்திருக்கும் எங்கள் மீதும் நீரள்ளி தெளித்துவிட்டு சிரிப்பாள்.நாங்கள்  சிணுங்கி ஒதுங்குவோம் . எங்களிடம் இருக்கும் சில்லறைகளை  வாங்கிகொண்டு  இங்கே இருங்கடா அண்ணன் வருவாரு என்று சொல்லிவிட்டு செல்வாள்  . சொண்டி அண்ணன் வந்து எங்கள் உயரங்களுக்கு  ஏற்றவாறு  சைக்கிள்களை கடையிலிருந்து  எடுத்து கொடுப்பார்.


மெல்ல மெல்ல வெளிச்சம் துளங்கிக்கொண்டு இருந்தது .  சில பிலிப்பைனி ஆட்கள் கரையோரத்தில் தூண்டில் போட்டுவிட்டு காத்திருந்தார்கள். அவர்களுக்கு காத்திருப்பது பிடித்திருக்கிறது. காத்திருப்பில் ஒரு மீன் வந்து முத்தமிட்டால்  மகிழ்ந்து துள்ளுகிறார்கள். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தூண்டிலில் மீன் சிக்கி மேலெழுந்தது. அந்த பிலிப்பைனி புன்னகையோடு அந்த மீனை துண்டிலிலிருந்து விடுவித்து பெட்டியில் போட்டான். என்னை பார்த்து தலையசைத்தான். நானும் புன்னகைத்தேன்.


நான் கைகால்களை உதறி தளர்த்தினேன். மூச்சை ஆழ இழுத்து ஓடுவதற்கு தயாரானேன். பக்கவாட்டில் கூடை பந்து விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர்கள்  ஓ வென்று கத்தினர். நான் திரும்பி அவர்களை பார்த்துவிட்டு  ஓடத்துவங்கினேன். நடைப்பயிற்சி செய்வதற்கு  தனிபாதை  அமைத்திருந்தார்கள் . இரண்டு பக்கமும் வெள்ளை கோடு வரையப்பட்டு தரையில் அடர் சிவப்பு வர்ணம் பூசி நேர்த்தியாக அமைக்கப்பட்ட ஓடுபாதை.  அதே போல சைக்கிள் ஓட்டுவதற்கும்  தனி பாதை இருந்தது.


என் வீட்டுக்கு அருகில் ஐந்து  நிமிட கார் பயண தூரத்தில் இருக்கும் பூங்காவில்  கடந்த நாற்பது நாட்களாக  தினமும் காலையில் மெது ஓட்டம் செல்கிறேன். இன்று ஒரு மாறுதலுக்காக  பத்து நிமிட கார் பயண தூரத்தில் இருக்கும்  கடற்கரைக்கு வந்தேன். முதலில் ஒரு கிலோமீட்டர் தூரம் என ஓட துவங்கி இன்று ஆறு  கிலோமீட்டர் தூரம் வரை ஓட, உடலும்  மனமும்  பழகி இருக்கின்றன. என் சீரான மூச்சுஒழுங்குக்கு எவ்வளவு வேகம் ஓடமுடியுமோ அவ்வளவு  வேகத்தில் ஓடுகிறேன். என் அறிதலில் ஓடுவதற்கு மூன்று முக்கிய விஷயங்கள் தேவை என கண்டுகொண்டேன். ஒன்று இரவு நன்றாக தூங்கி இருக்க வேண்டும் , இரண்டு சூழலும் காலநிலையும் நன்றாக இருக்கவேண்டும். மூன்று விலகாத உறுதி வேண்டும். இரவு நன்றாக தூங்கி இருந்தேன். ஆகஸ்ட் மாத இறுதிவரை தகித்துக்கொண்டு இருந்த சூடு இப்போது மெல்ல தணிந்து வருகிறது. காற்றில் கொஞ்சம் குளிரும் ஈரப்பதமும் இருந்தது. குளிர் மனதுக்கு இதமாக இருந்தது. ஈரப்பதம் கொஞ்சம் மூச்சை அடைத்தது. கடல் சற்று உள்வாங்கி இருந்ததால் கரை ஈரத்திலிருந்து எழும் அடர் வாசமும் காற்றில் இருந்தது. 


கடலில்  ஒரு விரைவு படகு நீர் பரப்பில் எரிந்த பானை ஓடு போல குதித்து குதித்து  வேகமாக போய்க்கொண்டு இருந்தது.  அதை ஒரு இளம் பெண் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தாள். பழுப்பு நிற டாப்ஸ்ம் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தாள். படகு துள்ளி எழும் கணம் போட்டோவில் பதிந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. வானத்தில் Grey Heron பறவைகள் சில பறந்து சென்றன. கரையில் தண்ணீர் உள்வாங்கி இருந்ததால் ஈரத்தில் புழுக்களை தின்ன  சில பறவைகள் கீழ் இறங்கி வந்தன. 


ஒரு சின்ன பையன்  எனக்கு முன்னாள் ஓடிக்கொண்டு இருந்தான் . நின்று திரும்பி எனக்கு இணையாக மூச்சுவாங்கி ஓடிவரும் அவன் அப்பாவிடம் பப்பா  ஜல்தி ஜல்தி ம்ம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஓடினான் . அவர் பாக்கிஸ்தான் வெள்ளை ஜுப்பா அணிந்திருந்தார். மூச்சுவாங்கி தலைகுனிந்து முட்டியில் கைவைத்து நின்று விட்டார். அந்த சின்ன பையன் பின்னால் நான் ஓடிக்கொண்டு இருந்தேன்.  அவன் என்னை அவனுடைய அப்பா என  சில கணங்கள் நினைத்திருக்க கூடும் . என்னை பார்த்தவுடன் சின்ன ஏமாற்றம் அடைந்தான் .  பின்பு நின்று திரும்பி பப்பா கம் பாரஸ்ட்  என்று சொல்லிக்கொண்டு அவன் அப்பாவை நோக்கி ஓடினான். இப்போது என் மூச்சும் ஓட்டமும் சீராக இருந்தது. வானில் வெளிச்சம் பரவிக்கொண்டு இருந்தது. நான் ஒரு கிலோமீட்டர் கடந்திருந்தேன்.


சீருடை அணிந்த துப்புரவு பணியாளர்கள் புல்வெளியில் பரவியிருந்த காய்ந்த இலைகளை பொறுக்கிக்கொண்டு இருந்தார்கள். பெரும்பாலும் பெங்காலிகள் கொஞ்சம் இந்தியர்கள். பணிசெய்யும் இடங்களில்  இவர்களுக்கு  சொற்ப கூலி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாலைகளில் , சிக்னல்களில் , பூங்காக்களில் தூமைசெய்துகொண்டே எதிர்படுபவர்களை நின்று  ஒருகணம் பார்க்கிறார்கள். சிலர் சலாம் வைக்கிறார்கள் .பணம் , உணவு எதுகொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். இந்த ஊர் ஆட்கள் கார் கண்ணாடியை சற்று இறக்கி பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இங்கு பணம் இருக்கிறது. அதை செலவு செய்ய வணிக வளாகங்கள் இருக்கின்றன. அதே  போல  கருணை காட்ட சில மனிதர்களும் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு காபி ஷாப்பில் இந்த ஊர் ஆள் ஒரு இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்திருக்க  அவர் எதிரில் தூய்மை பணியாளர் ஒருவர் குறுகி அமர்ந்து பர்கர் தின்றுகொண்டு இருந்தார். அங்கு கருணை பரிமாற்றமும் நன்றி பிரவாகமும்  நிகழ்ந்துகொண்டு இருந்தன. 


நான் இரண்டு கிலோமீட்டர் கடந்திருந்தேன். சூரியன் இளம்  சிவப்புநிறத்தில் மெதுவாக துயில் நீத்து எழுந்தது. இன்னும் தழல் கூடி ஒளிரவில்லை. எனக்கு வியர்வையில் முகம் நனைந்தது. மூன்று நடுவயது மூத்தவர்கள் என் எதிரே நடந்துவந்தார்கள். வடஇந்தியர்களாக இருக்கலாம். அவர்களுடன்  ஒரு பொட்டு வைத்த பெண்மணியும் நடந்துவந்தார். அனைவரும் வியர்வையில் நனைத்திருந்தார்கள். சற்றுமுன்னர்  தான் எதோ சொல்லி சிரித்து முடித்திருப்பார்கள்  போல . அனைவர் முகத்திலும் புன்னகை. அந்த பெண்மணியின் வியர்வை ஊறிய முகத்தில் இருந்த  நனைந்த புன்னகை எனக்கு ஈர்ப்பாக இருந்தது. இந்த நகரில் நூற்றுக்கனக்கான தமிழ்  குடும்பங்கள் இருக்கின்றன. ஒருவரைக்கூட நான் இங்கு பார்க்கவில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் காலை ஆறுமணிக்கு  அலுவலகம் கிளம்புகிறார்கள். மாலை அதே நேரத்தில் வீடு திரும்புகிறார்கள். அதையும் மீறி நேரம் கிடைப்பவர்கள் உடல் மனம் சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேலைமட்டுமே வாழ்வென வாழ்பவர்கள். நடுவயது தாண்டி உடல் சமன் குலைந்து மருத்துவரின் அழுத்தத்தால் நடை பயிற்சிக்கு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.ஆனால் அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டவர்கள் மிகக்குறைவே. 


நான் மூன்று கிலோமீட்டர் கடந்திருந்தேன். நான் திரும்பும் எல்லை வந்தது. கோபர் வாட்டர் டவர்  இந்த நகரத்தின் அடையாளங்களில் ஒன்று . கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட கோபுரம் . தூரத்திலிருந்து பார்த்தால் குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் கிளுகிளுப்பை போல இருக்கும். அந்த கட்டிடத்துக்கு  நேராக வளைந்து திரும்பினேன் . வரும் வழியில் உள்ள ஒரு  காபி ஷாப்பில் கடலை பார்த்தவாறு நிறைய அரேபிய குடும்பங்கள் அமர்ந்திருந்தனர்.  ஒரு இளைஞன்  கையில் குழந்தையை ஏந்தி  தன் கூரான நாசியால் குழந்தையின் கண்ணங்களை குழைந்து  கொஞ்சிக்கொண்டு இருந்தான். குழந்தை சிணுங்கி சிரித்தது . சில பெண்கள் உதயத்தை பார்த்தவாறு ஆவி எழும் காபியை அருந்திக்கொண்டு இருந்தனர். கருப்பு கண்ணாடி அணிந்த இரண்டு பெண்கள் சூரியனோடு தர்ப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர் . அருணன் சூரியனைப்பார்த்து மெலிதாக சிரித்திருப்பான்.  கரைமணலில் அமர்ந்திருந்த ஒரு சூடானி கணவன் மனைவி கண்மாராமல் உதயத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களின் கருப்பு குழந்தை நம்மூர் பட்டு பாவாடை அணிந்திருந்தது . கருங்சிலைக்கு மஞ்சள் ஆடை அணிந்து போல . வியப்பில் மறுபடியும் பார்த்தேன் . ஆம் பட்டுப்பாவாடை தான். பின்பு நினைவுக்கு வந்தது , இங்கு பழைய  துணிகள் பொருட்கள் சேகரிக்கும் அரசு சார் அமைப்பு ஒன்று இருக்கிறது . அவர்கள் நகரத்தில் பல இடங்களில் பொருட்களை சேகரிக்க ஆள் உயர பெட்டிகள் வைத்திருக்கிறார்கள் . நானும் பலமுறை பழைய உடைகளை அந்த பெட்டியில் போட்டு இருக்கிறேன். இவர்கள் அந்த பெட்டியிலிருந்து துணிகளை எடுத்திருக்கவேண்டும். ஏழைக்கு மறைக்க எந்த ஊர் உடை இருந்தால் என்ன . 


எனக்கு ஒருபுறம் நீலம் ஆழம் கடல் . இன்னொரு புறம் பச்சை புல்வெளி, கொஞ்சம் நிழல் தரும் அளவு வளர்ந்த ஆல மரங்கள் , இடைவெளி விட்டு குழந்தைகள் விளையாடும் சருக்கு மரம் ஊஞ்சல்கள் அதில் உற்சாகத்தில் குழந்தைகள். சட்டென ஒரு இளம் பெண் என்னைவிட கூடுதலான வேகத்தில் கடந்து சென்றாள். ஐரோப்பியக்காரி. வெகுநாள் ஓடி பழகிய கைப்பிடி சதையில்லா நேரான உடம்பு. ஓடுவதற்கு என்று சரியான உடைகள் மற்றும் ஷூ அணிந்திருந்தாள். என் மூச்சின் தாளக்கட்டு மாறி ஓட்டத்தின் வேகம் மாறுவதை உணர்ந்தேன். நிதானித்து தலைநிமிர்வதற்குள் ஒருவளைவில் ஓடி  காணாமல் போனாள் , பட்டாம்பூச்சியை கண்களால் தொடரமுடிவதே இல்லை.  எப்போதும் என இருப்பவைகளை விட  மின்னல் என வந்துபோவது சலனப்படுத்திவிடுகிறது . ஐந்து கிலோமீட்டர்கள் முடிந்திருந்தது.


கல் இருக்கையில் ஒருவர் அசையாமல் அமர்ந்திருந்தார். போகும்போது அவரை கவனிக்கவில்லை. இப்போது திரும்பி வரும்போது கவனிக்கிறேன் . கடலையே பார்த்துக்கொண்டு இருந்தார். சுற்றி நிகழும் எந்த அசைவுகளுக்கும் அவர்  உடலில் எந்த சலனமும் எதிர்வினையும் இல்லை. ஹாலோ சார் என்னாச்சு என்று கேட்க தோன்றும் முகபாவம். எனோ அவரை பார்த்ததும் பெருமூச்சு வந்தது. சினிமா சொலவடை "யார் பெத்த புள்ளையோ" என்று நினைத்துக்கொண்டேன். 


அன்றாடத்தின் மீதான  சலிப்பு எனக்கு எப்போதுமே இருக்கும். சிலநாள் காலையில் அலுவலகம் கிளம்பும் போதே அந்த சலிப்பு என் மனதை ஆக்கிரமிக்கும். அப்போதெல்லாம் நான் சூரியனைத்தான் பார்ப்பேன். எனக்கு அன்றாடத்தின் குறியீடே சூரியன்தான். தினம் தினம் மாற்றம் இல்லாமல் நிகழக்கூடியது. சலிக்காமல் நிகழக்கூடியது. 


இப்போது சூரியன் கொஞ்ச கொஞ்சமாக மேலெழுந்து, கடலின் பரப்பு  பொன்னொளியாக மாறியது. அந்த எழுதலால் நான் அதிர்ந்து கொண்டு இருந்தேன். மனம் பெரும் ஒளியால் நிரம்பிக்கொண்டு இருந்தது.  என் யோக ஆசிரியர் கற்பித்த காயத்திரியை உச்சரித்தேன்.  மூச்சில் மந்திரமும் இயைந்து அதிர்ந்தது. சட்டென புல்வெளி ஓரங்களில் பதித்திருந்த குழாய்களிலிருந்து  நீர் பிச்சி அடித்தது. புல்வெளி  பல்லாயிரம் பொன் நீர்த்துமிகளால் நிறைந்தது. புல்வெளிகளில் படுத்து புரண்டுகொண்டு இருந்த பூனைகள் குதித்து குதித்து வெளியே ஓடி  வந்தன. பச்சை புள் வாசம் மூச்சை அடைத்தது . எனக்கு உடலில் சூடு அதிகரித்து . பிழிவது போல வியர்வை கொட்டியது. சூரியனின் தன்மை துளியளவு என் உடலுக்குள்ளும் இருக்கிறது. அது சூரியனை உணர்கிறது . உடல் முழுக்க வெளிப்படுகிறது. உடலை இயக்குகிறது. அது பிரகாசிக்கும்போது நானும் ஒளிர்வேன் .அது அணையும் போது நானும் அணைவேன்.  


ஆறு கிலோமீட்டர் முடிந்தது என போனில் டிஜிட்டல் பெண் சொன்னாள். அந்த ஆப்பில் என்னுடைய இந்த சிறு சாதனைக்கு ஒரு டிஜிட்டல் கோப்பையை கொடுத்தார்கள்.  இனி நம் மீது  அன்பு காட்ட ஆறுதல் சொல்ல என எல்லாவற்றிக்கும் ஆப்கள் வரும் என நிக்கிறேன். 


ஒரு கல் இருக்கையில் தளர்வாக அமர்ந்து நானும் கடலை பார்த்தேன். அலைகள் இல்லை . நீல பெருவெளி . ஆழப்பெருவெளி . உடல் குளிரத்துவங்கியதும் வியர்வை அடங்கியது. மனம் மலர்ந்திருந்தது . ஏனோ வாய்விட்டு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. வாழ்க்கை இனிது வாழ்வது இனிது. 


 
https://www.ilakiyaoli.com//assets/uploadfiles/uploadfiles166418797878.mp4