காப்பர் கந்தசாமி

Posted on July 4, 2022 by சே சிவக்குமார்
...

வாஷிங் மெஷினில் துணிகளை போடும்போது என் சட்டை  பாக்கெட்லிருந்து ஒரு ஆணியை எடுத்து ஏம்பா இது வேணுமா என்றாள் கீர்த்தனா. வழக்கமாக என் பாக்கெட்லிருந்து இதுபோல சின்ன சின்ன நட்டுகள் போல்ட்டுகள் கிடைக்கும். அதை பத்திரமாக எடுத்து வைத்து என்னிடம் கொடுப்பாள். அவை பெரும்பாலும் நான் வேலை செய்யும் இடத்தில் கை பழக்கத்தில் எடுத்து பாக்கெட்டில் போடுபவை . அந்த ஆணியை வாங்கி பார்த்தேன். எனக்கு சட்டென துக்கம் அடைத்தது , கண்களில் நீர் கோர்த்தது . ஏன் என்னாச்சுப்பா என்று என் கையை பிடித்தாள் கீர்த்தனா . நான் அவள்  கையை விடுத்து   என் அறைக்கு சென்று அந்த ஆணியை மேசையில் வைத்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ஐந்து நிமிடம் கழித்து கீர்த்தனா காபி எடுத்துவந்தாள். என்னப்பா பிரச்னை சொன்னாத்தானே தெரியும். நானும் பாக்குறேன் வீட்டுக்கு  வந்ததிலிருந்து ஜன்னல் பக்கத்துல  போய் நிக்குற சாமி படத்தை போய் நின்னு பாக்குற ரூம்ல வந்து நிக்கிற என்னாச்சு. சைட்ல என்ன பிரச்னை. 


போன மாசம் சைட்ல ஒரு பெரிய கேபிள் போடற வேலையில இருந்தது. கேபிள்ன்னா சின்னது இல்ல , அத தூக்கவே பத்தாளு வேணும். கேபிள் சுத்தி வச்சிருக்கிற ட்ரம்மு ஒரு சின்ன மரவீடு போல இருக்கும் . மெசின வச்சி தான் அந்த கேபிளை  இழுப்பாங்க. மோட்டர்ல  திரி  பேஸ் வயர் இருக்குமுல்ல அது மாதிரி இது பெரிய ட்ரான்ஸ்பார்மருக்கு போறது. கொரியாவுல இருந்து பெரிய டீம் வந்து ரெண்டு மாசம் வேல செஞ்சாங்க. வேல நல்லபடியா முடிஞ்சது. அப்படி கேபிளை போடும்போது சின்ன சின்ன கட் பண்ண பீஸ் மிச்சமாகும். அதெல்லாம் சேத்துவச்சி  கம்பெனி ஸ்க்ராப் வாங்குற ஏஜெண்சி கிட்ட நல்ல விலைக்கு விப்பாங்க . அந்த கேபிளுக்கு உள்ள  உயர் ரகமான காப்பர் இருக்கும் . மீந்த கட் பீஸ்ங்க மட்டுமே பல லட்சம் போகும்.


ஒருநாள்  மீந்த கட் பீஸ்ங்க எல்லாம் மொத்தமா காணாம போயிடுச்சி. பொதுவா ஒரு சப்ஸ்ட்டேசன் ( துணைமின்நிலையம் )  கன்ஸ்டரக்சன் சைட்ல நானுறு பேருக்கும் மேல  வேல செய்வாங்க. அதுல இந்த மாதிரி பொருட்கள் காணாம போறது வழக்கமா நடக்கும். அதுவும் இந்த காப்பர் கேபிள் காப்பர் வயர்க்கு கிராக்கி அதிகம். சைட்டிலிருந்து ஆளுங்க அத கைல கால்ல எல்லாம் சுத்தி மறைச்சி எடுத்துட்டு போவாங்க. உள்ளூர் காரங்களே இரவு நேரத்துல திருட வருவாங்க. அப்படி நிறைய சம்பவம் நடந்தும் இருக்கு. ஆனா இது போல பெரிய அளவில திருட்டு  இது தான் மொத முறை. 


கம்பெனி மேல் அதிகாரிங்க போலீஸ்ல புகார் கொடுத்தாங்க . போலீஸ்கரங்க சைட்டுக்கு வந்து விசாரிச்சிட்டு போனாங்க , சைட்ல இருந்தும் நாங்க ஒருபக்கம் ஆளுங்கள வச்சி விசாரிச்சப்ப கேபிள் வேல செய்ஞ்ச சப் காண்ட்ராக்ட் ஆளுங்க கொஞ்சம் பெரு சிக்குனாங்க. அவங்கள கம்பெனிகாரங்க  போலீஸ்ல ஒப்படிச்சாங்க. 


இப்ப சப்ஸ்டேஷன் கட்டுமான வேல முழுமையா முடுஞ்சி போச்சி. கிட்டத்தட்ட கடந்த மூனு வருஷமா ராப்பகலா உழைச்சி உருவாக்கினது. அடுத்தவாரம் அதனோட துவக்க நாள். அத நாங்க எனர்ஜய்சேஷன்னு சொல்லுவோம். முக்கியமான ஆளுங்க எல்லாம் வருவாங்க. அதனால சைட்ல  தேவையில்லாத பொருளை எல்லாம் நீக்கி, எல்லா இடத்தையும் , எல்லா புது மெஷனையும் சுத்தமா தொடச்சி ரெடிபண்ண ஆளுங்கள போட்டு இருந்தோம். 


இன்னக்கி காலையில நா சைட் ஆபிஸிலே இருக்கும்போது மாரிசூப்பர்வைசேர்   ஒரு பையன  கூட்டிட்டு வந்தார். சார் இவன் பவர் கேபிள தொடச்சிட்டு இருந்திருக்கான் அப்ப அதில அணி அடிச்சிருக்குன்னு சொன்னா. நானும் இவனும் போய் பார்த்தோம் . மூணு பேஸ்ளையும் அங்கங்க அணி அடிச்சிருக்கு பாருங்கன்னு போன்ல போட்டோவை காண்பிச்சார். எனக்கு அடிவைத்த பயம் கவ்வி பிடிச்சது. அவன கூட்டிகிட்டு ஓட்டமும் நடையுமா சைட்ல போய் பார்த்தேன். ஆமா கேபிளில் நெறைய இடத்துல அணி அடித்திருந்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுங்கி போச்சு . உடனே மேனேஜருக்கு போன் போட்டு அழைத்தேன். அவர்  ஆஃபீஸிலிருந்து இன்னும் சில முக்கிய புள்ளிகளை கூட்டிகிட்டு சைட்க்கு ஓடிவந்தார். ஆணிகளை ஒவ்வொண்ணா தொட்டு தொட்டு பார்த்தார் . உடல் முகம் எல்லாம் நடுங்க நடுங்க எல்லாரையும் திட்டி தீர்த்தார். அத்தனை பேரும் அமைதியா தலைகுனிந்து நின்னேம். எனக்கு கால் நடுங்கிக்கொண்டே இருந்தது. மேனேஜர் கொஞ்சநேரம் கழிச்சி அமைதி ஆனார். சார் இத எவன் பண்ணான்னு  மொதல்ல கண்டுபிடிக்கணும் சார்ன்னு  சாமி சார் சொன்னாரு. அதவிடுங்க இத எப்படி சரிபண்ணலாம் அத சொல்லுங்க அப்படின்னு  மேனேஜர் கேட்டாரு . 


நா மெதுவா,  சார் ஒரே ஒரு எடத்துல ஆணி அடிச்சிருந்தா கேபிளை கட் பண்ணி ஜாயிண்ட் பண்ணலாம் ஆனா அங்கங்க அடிச்சிருக்கு , ஒன்னும் பண்ண முடியாது.  மூணு கேபிளையும்  மொத்தமா எடுத்துட்டு புதுசாதான் போடணும்.


அதுக்கு எவ்வளவு நாள் ஆகும்?


இந்த வேல சாதாரணமா ரெண்டு மாசம் ஆகும். 


நோ நோ அவ்வளவு டைம் நமக்கு இல்ல , ரவுண்டு த கிளாக் டுவெண்ட்டி போர் ஹௌவர்ஸ் வேல பாத்த எவ்வளவு நாள் ஆகும் 


சார் கேபிள் புதுசு வேணும். இப்ப ஆர்டர் போட்ட கொரியாவில் இருந்து வந்து சேர இன்னும் ஆறுமாசம் ஆகும். அதுவும் இல்லாம கொரியாவிலிருந்தும் ஆளுங்க வரணும் 


நா கேபிள் நம்ம ஸ்டோரில் இருக்கான்னு பார்க்கிறேன். வேற ஏதாவது ப்ரோஜெட்டுக்கு வாங்கி இருப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு கிளைண்ட்டுக்கு போன் பண்ணார். கொஞ்ச நேரத்துல  பெரும்  கிளைண்ட்டு கும்பல் சொகுசு கார்களில் வந்து இறங்கியது.


CCTV ரெகார்ட் இருக்கா , குவாலிட்டி கண்ட்ரோலர் எங்க சேப்ட்டி ஆபிஸ்ர் எங்க, கேபிள் போடும்போது யாரெல்லாம் வேல செஞ்சா லிஸ்ட் எங்ககண்ணு ஒரே கலாட்டா பண்ணினாங்க பிறகு  அவங்களும் எங்க ஆளுங்களும் மூனு  மணிநேரம் மீட்டிங் ரூம்ல  பேசிகிட்டே இருந்தாங்க. கத்துற சத்தம் மட்டும் கேட்டுகிட்டே இருந்தது. கடைசியா எல்லாம் வெளியே வந்தாங்க . கிளைண்ட்டு ஆளுங்க கிளம்பி போனபிறகு மேனேஜர் எங்களை கூப்பிட்டார் .


நா சந்தம் போட்டத மனசுல வச்சுக்காதீங்க . அவங்க இருவது நாள் டைம் குடுத்திருக்காங்க . நம்ம முயற்சி பண்ணுவோம்.  கேபிள் போட எல்லா ஏற்பாட்டையும் பண்ணுங்க முடிஞ்சா அந்த ஆள் யாருன்னு கண்டுபிடிங்க அப்படின்னு சொல்லிட்டு போனாரு. 


அந்த கேபிள் இல்லாம நீங்க சப்ஸ்டேஷனை ஸ்டார்ட் பண்ண முடியாதா ? என்கிறாள் கீர்த்தனா 


இல்ல பண்ணமுடியாது.  அந்த கேபிள் வழியாக தான் ஸ்டடிசனுக்கான சப்ளை உள்ளே வரும். 


அப்ப நல்லா தெரிஞ்ச ஆளு தான் யாரோ பண்ணி இருக்கான் . அந்த ஜெயிலுக்கு போன ஆளுங்களோட சொந்தகாரங்க தெரிஞ்சவங்க ஊர்க்காரங்க யாராவது பண்ணியிருப்பாங்க.


நாங்க மொதல்ல அப்படிதான் நெனச்சோம் , எல்லாரையும் வர சொல்லி விசாரிக்க ஆரமிச்சோம். ஆனா ஜெலிலுக்கு போனவங்க  சாதாரண லேபர் ஆட்கள். அவங்களால அந்தளவுக்கு யோசிக்க முடியாது. 


அமெரிக்காவுல ஏரோபிளேன் கட்டிடத்துமேல மோதினப்ப நெறைய பேர் செத்துபோனாங்க , சட்டுன்னு எனக்கு தோணின விஷயம் , அதில இருந்த இன்ஜினியரிங் பிளான் தான். இந்த விஷயத்திலும் எனக்கு அப்படி தான் தோணுச்சு. ஒரு மனுஷனோட மூளையில் ஏற்படுற சின்ன மின்னதிர்வு  பல காலம் கட்டி நிறுத்துற கோபுரத்த கூட சாதாரணமா குலச்சி போட்டுடுது. 


அந்த ஆள கண்டுபிடிச்சா ஒரு என்ஜினியரா அவனுக்கு கை கொடுக்கனுன்னு தான்  தோணுச்சு. 


இப்ப வீட்டுக்கு கிளம்பரத்துக்கு முன்னாடி எனக்கு  வாட்ஸப்ல  ஒரு வாய்ஸ் மெஸேஜ் வந்தது. 


கந்தசாமி சீனியர் சூப்பர்வைசர் அனுப்பிருந்தாரு 


நா இருந்த மனநிலைமையில அத கேக்கனுன்னு எனக்கு தோணல . 


அவர் எங்க கம்பெனில பழைய ஆளு , வயசு ஒரு அம்பது இருக்கும் . ஊரு கோவில்பட்டி பக்கத்தில ஒரு கிராமம் . இருவது வயசுல இந்தியாவுல இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்காரு. பத்துவருஷம் அங்க வேல பாத்துட்டு அதே கம்பெனி இங்க சவூதியில வேல எடுக்கும்போது இங்க வந்திருக்காரு. இங்க வந்து இருவது வருஷமாச்சு. ரொம்ப நுணுக்கமான ஆளு. அவர்கிட்ட வேல குடுத்தா அது நல்லபடியா முடிஞ்சதுன்னு அர்த்தம். காலையில மொத ஆளா சைட்டுக்கு வந்து கடைசி ஆளா வெளியே போவாரு. நா என்ஜினீயர் வேலையே அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன்.  இந்தியா வேலைன்னு சொல்லுவாங்க . அதாவது வேல செய்ய சரியான டூல்ஸ் கருவிங்க எதுவும் இருக்காது  இருக்கிறதவச்சிக்கிட்டு  அனுபவம் உள்ளுணரவ நம்பி  வேலைய கச்சிதமா முடிகிறது . நா முக்கியமா அத தான் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். நீ இங்க வருவதற்கு முன்னாடி இரவு நேரத்துல அவர் தங்கியிருந்த ரூம்முக்கு போய் பேசிகிட்டு இருப்பேன். ரொம்ப சீனியர். அதனால அவருக்கு தனி ரூம் கொடுத்து இருந்தாங்க. தனியா டீவி பிரிட்ஜ் எல்லாம் வச்சிருந்தார். 


அந்த கேபிள் போடுற வேலையில அவர்தான் சூப்பர் வைசர். அந்த வேலைக்காக கொரியாவில இருந்து வந்தவங்க , எங்க கம்பெனி ஆளுங்க , சப் காண்ட்ராக்ட் ஆளுங்க எல்லாரையும் அரவணச்சி அந்த வேலைய நல்லபடியா முடிச்சாரு. கேபிள் திருடு போனப்ப அவர் பேரும் அடிபட்டது. கம்பெனி மேலிடம் அவரையும் போலீஸ் விசாரணைக்கு அனுப்பணுன்னு சொன்னாங்க. ஆனா சைட் மேனேஜர்மாருங்க  அத ஒத்துக்கல. பெரிய வாக்குவாதம் நடந்தது. கடைசியில  கம்பெனி மேலேடம் எங்களுக்கு ரெண்டு வாய்ப்பு குடுத்தாங்க . ஒன்னு அவரை கேஸ்ல சேர்த்து விசாரிக்கணும் இல்ல வீட்டுக்கு அனுப்பனும். 


கேசு விசாரணைன்னு போனா அது அவ்வளவு சீக்கிரம் முடியாது அவரு ஊருக்கே போக முடியாது காலத்துக்கும் இங்க தான்  இருக்கணும். அதனால சைட் மேனேஜர்மாருங்க  அவரை வீட்டுக்கு அனுப்பிடலாம்முன்னு முடிவு பண்ணங்க. அந்த முடிவு சைட் முழுக்க பரவிப்போச்சி. 


அதுக்கு பிறகு அவர சைட்ல காப்பர் கந்தசாமின்னு எல்லோரும் கூப்பிட  ஆரமிச்சிட்டாங்க.  அதனாலேயே அவர் சைட்டுக்கு வராம ரூமுக்குள்ளே கெடந்தாரு . நா போய் பார்த்து பேசி ஆறுதல் சொல்லமுன்னு போனேன் . அவரு கதவே தொரக்கல . என் கிட்ட பேசமுடியாதுன்னு சொல்லிட்டாரு . பத்து நாள்ல அவருக்கு ஊருக்கு போக டிக்கெட் வந்துடுச்சி. ஆனா அவருக்கு வரவேண்டிய இருவது வருட செட்டில்மென்ட் பணம் கம்பெனி மேலிடம் குடுக்க முடியாதுன்னு சொல்லிடிச்சி. போன வாரம் ஊருக்கு கிளம்பி போனாறு. ரூமுல அடிக்கடி  அழுதுட்டே இருந்ததா  அவர் ஊர்க்கார பையன் சொன்னான். 


அதுக்கப்புறம் இருந்த வேலை அழுத்தத்துல அவர்  ஞாபகமே  எனக்கு வரல. இந்த அணி விஷயத்த நினைச்சுகிட்டு இருந்தப்ப தான் தண்ணில ஒரு எல வந்து விழுந்த மாதிரி அவர் பேர் ஞாபகம் வந்தது. உடனே போன் எடுத்து அவரு அனுப்பின  வாய்ஸ் மெஸேஜை கேட்டேன். 


சார்  வணக்கம் சார் , நா கந்தசாமி பேசுறேன் . நீங்க அன்னிக்கி ரூமுக்கு வந்திங்க நா உங்கள பாக்கல . பார்த்து பேசியிருந்தா இந்த அளவுக்கு போயிருக்காது . என்ன மன்னிச்சிருங்க . எனக்கும் அந்த திருட்டுக்கும்  எந்த சம்மந்தமும் இல்ல. நானும் நீங்களும்  பத்து வருஷம் ஒண்ணாவே வேல பார்த்தோம் . உங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும். எனக்கு மூணு பொண்ணுங்க ரெண்ட கெட்டி கொடுத்துட்டேன் . ஒரு பையன் என்ஜினியர் படிக்கான். இப்படி திருட்டு பட்டம் கெட்டி ஊருக்கு அனுப்பினா என்னைய யாரு மதிப்பா . வடக்க நட்றாம்பள்ளி தெக்க கோவில்பட்டி . தமிழ்நாட்டுல இந்த ரெண்டு ஊர்க்காரங்க தான் இந்த டவர் வேல சப்ஸ்டேஷன் கட்டுற வேல பாக்கங்க. ஏம்மேல பழி போட்ட அது  ஊர் மேல  பழி போட்டது மாதிரி இல்ல.  சென்டல்மண்ட்  பணமும் கொடுக்கல இன்னும் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கணும் பையன படிக்கபோடனும் நா என்ன செய்ய. 


அதான் ஊருக்கு போறத்துக்கு மொத நாள் நைட் டூட்டி வாச்மேன் வண்டில சைட் க்கு வந்தேன். எல்லாரும் அசந்தபிறகு ஒரு கை பிடி ஆணி ஒரு சுத்தியலை எடுத்துட்டு கிளம்பிட்டேன். கேபிள் நட்டமான இன்சூரன்ஸ் உண்டு ஆனா எத்தன நாள் உழைப்பு எத்தன அழுத்தம் வரும் , அதுவே கோடிக்கணக்குயில்லா எல்லாம் சாவுங்கடா அப்படின்னு தான் மொத ஆணிய அடிச்சேன். காலமெல்லாம் கம்பெனிக்காக உழைச்சேன். அன்னிக்கி கம்பெனி மேலதிகாரிங்க என்ன ஒரு ரூமுல நிக்கவச்சி ஒரு கைதி மாதிரி கேள்வி கேட்டாங்க , வயதுக்கு ஒரு மரியாத கொடுக்கல  அத நெனைச்சி ரெண்டாவது ஆணி , அம்புட்டு நாள் வேல செஞ்சி சென்டல்மெண்ட் காசில்லன்னா எப்படி சார் அத நெனச்சி  முன்னாவது ஆணி . அப்படியே  மனசில இருந்த எல்லா கோவத்துக்கும் ஒரு ஆணி . ஒவ்வொரு அணி அடிக்கும்போதும் மனசுல இருந்த பாரமெல்லாம் கொறஞ்சி மனசே லேசானமாதிரி இருந்தது . கடைசியா ஒரு  ஆணி கைல இருக்கும்போது கண்ணு இருட்டற மாதிரி இருந்துச்சு  கையெல்லாம் நடுங்குச்சி. ஆணிய கேபிள்ள வச்சு சுத்தியலை ஓங்கி அடிச்சேன். அடி தவறி ஆணிய புடிசிருந்த கட்ட வெரலு மேல அடி விழுந்தது. அம்மான்னு கத்தி அங்கேயே உக்காந்துட்டேன். கை வெட வெடன்னு நடுங்குது கண்ணுல தார  தாரையா  தண்ணி .  அங்கேயே குறுகி படுத்துகிட்டேன் .கொஞ்ச நேரம் கழிச்சி மெதுவா எழுந்து சைட்லயிருந்து வெளியே வந்து   நடக்க ஆரமிச்சேன். கை நடுக்கம் தீரல . நட தள்ளாட்டமா இருந்தது. வரவழில பாலை மணல்ல அப்படியே உக்கார்ந்து வானத்த பார்த்தேன். நிலா கிட்டத்துல இருந்தது. அது என்னைய பார்த்து சிரிச்சது . ரொம்ப நாளுக்கு பிறகு என்னோட அடி தவறி போச்சி. தொழில் கத்துக்கும்போது நிறையமுறை அடிபட்டு இருக்கு. பிறகு அந்த தொழில் தெய்வம் என்மேல கரிசனம் காட்டி  இறங்கி வந்தது. கைல லாவகம் கூடுச்சி . புத்தியில வேலையோட நுணுக்கம் கூடி வந்தது. நா படிக்காதவன். அந்த தெய்வம் தான்  மனைவி மக்க வீடு தோட்டம் மரியாத எல்லாம் கொடுத்தது . கம்பெனிய பழிவாங்குறதா நெனச்சி தொழில் தெய்வத்துக்கு துரோகம் பண்ணிட்டேன். எப்ப நா மொத ஆணிய அடிக்க கைய ஓங்கினேனோ அப்பவே தெய்வம் என்ன விட்டிட்டு போயிடுச்சி. முப்பது வருஷம் என்ன பாதுகாத்த தொழில் என்ன விட்டிட்டு போயிடுச்சி. எனக்கு தெரிஞ்சிபோச்சி இனி ஸ்பானர் எடுத்தா அது என் கைல நிக்காது. தொழில் நுணுக்கம் அத்தனையும் என் நெஞ்ச விட்டுட்டு  போயிடுச்சி. துக்கத்தில வாய்விட்டு கதறி அழுதேன். அங்கேயே டவர்ல கைத்த போட்டு என் கதைய முடுச்சிக்கிடலாமுன்னு நினைச்சேன் . ஆனா எழுந்து போக தெம்பு இல்ல. அப்படியே படுத்தே கிடந்தேன். எப்ப தூங்கி போனேன்னு தெரியல. காலைல பாலையில மண்ணு காத்து பலமா இருந்தது. என்னையும் மணலு  மூடி இருந்தது. எழுந்து மண்ணெல்லாம் தட்டிவிட்டுக்கிட்டு பொணம் போல  நடந்து ரூமுக்கு வந்தேன். 


நா ஊருக்கு வருவதற்கு முன்னாடியே காப்பர் கந்தசாமின்னு என்  பேரு அங்க போயிருந்தது. ஊர்கார பயக கிண்டல் பணாங்க . வீட்டில எல்லாரும் மையமா இருந்தாங்க , எனக்கு சோறு தண்ணி எறங்கள. அங்க நீங்க என்ன பாடுபடுவீங்க  எத்தன பேர்கிட்ட கைய கட்டிகிட்டு பதில் சொல்லுவீங்க , ராப்பகலா கேபிளா சரி செய்ய படுபடுவீங்க  நினைக்க நினைக்க எனக்கு  துக்கமா இருந்தது. நிலகொள்ளல.  என்ன பண்றது தெரியல . அதான் பாலிடால் குடிசிட்டு இப்ப எங்க குலசாமி  முன்னாடி படுத்திருக்கேன். சாமி என்ன மன்னிக்காது . நீங்க  என்னைய மன்னிச்சிருங்க சார். நம்ம சார்மருங்க கிட்ட சொல்லிருங்க. 


அய்யய்யோ என்று பதறினாள் கீர்த்தனா ? என்னாச்சி அவருக்கு ?


நா அந்த நம்பருக்கு  போன் பண்ணேன். அவரோட பையன் எடுத்தான். ஐ சி யு ல இருக்காராம். பொழச்சுக்குவாருன்னு டாக்டர் சொல்லி இருகாங்க . 


இப்படியெல்லாமா மனுசங்க இருக்காங்க 


ஆமா இருக்காங்க இன்னும் சில பேரு இருக்காங்க . அவரு கண்டிப்பா பொழச்சுக்குவாரு . இந்த மாதிரி ஆட்களை தெய்வங்கள் கைவிடாது.